ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.(திருக்குர்ஆன் 22:77)
Tuesday, April 2, 2013
வரலாற்றில் மின்னிடும் வைரங்கள்
வரலாற்றில் மின்னிடும் வைரங்கள்
‘இவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (அரிய) படிப்பினை உள்ளது.’ (12:111) என வான்மறை நெடுகிலும் வாழ்ந்து சென்ற இறைதூதர்கள் பற்றிப் பேசப்படுகிறது.
‘முன்னோர் வரலாறு பின்னோருக்குச் சிறந்த படிப்பினை!’ எனக்கூறுகிறது அராபியப் பழமொழி.’
ஆம்! வரலாறுகள் மனிதனை உருவாக்குவதில் மிகப்பெரும் இடத்தை வகிக்கிறது. எனவே தான், பக்கத்துக்கு பக்கம் வரலாறுகளைச் சொல்லிக்கொண்டே வருகிறது வேதத்திருமறை. அந்த வரலாற்றைப் படிக்கப் படிக்க வரலாற்றை உருவாக்கும் வீரமும் தீரமும் பிறக்கிறது மனிதனுக்கு! அதனால்தான்
”வரலாற்றைப் படிப்பதைவிட வரலாற்றைப் படைப்பது மேல்”
என்றார் ஓர் அறிஞர். அவர் கூறியவாறு வரலாற்றைப் படைக்க வரலாறுகளைத் திரும்பிப் பார்க்கிறோம்.
அங்கே உலா வருபவர்கள் யார் யார் தெரியுமா ?
1.உலகே வியக்க வைக்கும் இறைதூதர்கள்!
2.அடுத்து அந்த இறைதூதர்களின் மாபெரும் தலைவர்!
“அவர் தான் ஒருநூறு தலைவர்களின் வரிசையில் முதன்மையானவராக அமெரிக்கக் கிறித்தவராலும் உலகோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.”
.அடுத்து உலாவருபர்கள் யார் தெரியுமா?
3.”பற்றற்ற துறவிகள் ஆட்சிபீடத்திலமர்ந்து அரசோச்சும் அற்புத மாட்சியைக் காணவேண்டும்” என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கப்பேரறிஞன் பிளேட்டோ கண்ட இலட்சியக்கனவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர் நனவாக்கிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சிபீடமேறிய நான்கு உத்தமக் கலீபாக்கள்!
உடுத்திய ஒட்டு போட்ட ஆடையும், முரட்டு மாற்றாடை ஒன்றுந் தவிர்த்து வேற்றுடையற்றோராய் ஈற்றங் கூரை வேய்ந்த பெருமானாரின் பள்ளியிலே, மண்தரையிலே அமர்ந்து பிரமாண்டமான இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அரசோச்சினர் இந்த மனிதகுல மாணிக்கங்கள்.
அடுத்து எந்தக்கணத்திலும் அல்லாஹ்வுக்காக,அவனது ரஸூலுக்காக எதையும் துச்சமாக மதித்துத் தியாகம் செய்ய முன்வந்த தியாக சீலர்களான ஸஹாபா பெருமக்கள்.
”அல்லாஹ்விடம் வாக்களித்தவாறே உயிரைத்தியாகம் செய்த உத்தமர்களும், இன்னுயிரைத்தியாகம் செய்யக்காத்திருப்பவர்களும் இருந்தனர்” என இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட இலட்சியவாதிகள்.(குர்ஆன்: 23:33)
4.பெருமானாரின் இலட்சோப இலட்சம் பொன்மொழிகளை உலகுக்கு வாரி வழங்க நெடிய பயணம் மேற்கொண்டு தங்களை அர்ப்பணித்த இமாம்கள் என்னும் அற்புதப்புனிதர்கள்! அறிவை அள்ளி வழங்கிய அறிவுலக மேதைகள்! !
5.இஸ்லாத்தை உயிரினும் மேலாக மதித்து அதை அமுல் படுத்தி உலகையே வியப்பிலாழ்த்திய சிறந்த ஆட்சியாளர்கள்.
6.இறைவனது மார்க்கமே உலகிலே மேலானது.இறைதூதருடைய வாக்கே உயர்வானது என அல்லும் பகலும் போராடிய வீர தீரர்கள்!
7.இக்லாஸ் என்னும் தூய எண்ணத்தோடு இறைவனை அஞ்சி (தக்வாவுடன்) சத்தியம் ஒன்றிற்காக வாழ்ந்த உத்தமப் பெரியார்கள்.
இவ்வாறு வரிசை வரிசையாக ”வள்ளல் பெருமானார்(ஸல்) முதல் இன்று வரை” வாழ்ந்த பலரையும் வரலாற்றிலே உலாவரக் கண்டோம்.
விஞ்ஞானத்தின் உச்சிக்கே சென்று உலகை வியக்க வைத்துச் சாதனைகளைப் படைக்கும் இன்றைய மனிதனிடம் நம்பிக்கை,பண்பாடு,மனிதநேயம் அனைத்தும் ஆட்டம் கண்டு அழிவு, அக்கிரமம், பயங்கரவாதம், அந்நிய நாடுகளை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் காட்டுமிராண்டித்தனம் போன்ற ஈனச்செயல்கள் சூழ்ந்து கொண்டு அவனது நிம்மதியையும் சகவாழ்வையும் குலைத்து வருகின்றன.
காரணம்? ஒருசார்பான வளர்ச்சி!
விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள அளவுக்கு ஆத்மார்த்த அறிவு, ஒழுக்கம், பண்பாடு, மனித நேயம் ஆகியவையும் சேர்ந்து வளர்ந்திருக்குமாயின் இந்த பயங்கர நிலைமைக்கு உலகம் வந்திருக்காது. இந்த நல்ல பண்புகளைப் போதிக்க வேண்டிய மதவாதிகளே பயங்கரவாதத்திற்கும் அழிவுக்கும் துணைபோகும் போது எப்படி உலகில் அமைதியை எதிர்கார்க்க முடியும் ?
இதற்கெல்லாம் ஒரேவழி அன்பையும், அறத்தையும், அமைதியையும், நல்லொழுக் கத்தையும் மனித நேயத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் பால் உலகம் திரும்ப வேண்டும். அப்போது தான் உலகம் அமைதியையும் உயர்வையும் அடைய முடியும்.
அதற்கான வழிகளையும் பாடங்களையும் இறைமறையிலிருந்தும், இறைதூதர் வாழ்விலிருந்தும் அதன் அடியொற்றி செயல்பட்ட உத்தமர்கள் வீர வரலாறிலிருந்தும் அறியலாம். எனவே உயிரோட்டமுள்ள வரலாற்று நிகழ்வுகளை கீழே காணும் மாமனிதர்களின் வரலாறுகள் மூலம் பயன் பெற அருள் புரிவானாக!
அந்த மாமனிதர்கள் இவர்கள் தான்!
1. பார்போற்றும் பெருமானார் (ஸல்)
2. ஏகத்துவம் பேசிய இறைதூதர்கள் (அலை)
3. நேர்வழிநின்ற கலீபாக்கள் 4. சுவனவாசிகள்
5. நல்லறத் தோழர்கள்
6. நல்லறத் தோழியர்கள்
7. வீரத் தியாகிகள்,
8. தனிப்பெரும் தாபியீன்கள்
9. மாண்பார் இமாம்கள்
10.அறம்நின்ற ஆட்சியாளர்கள்
11.அறிவுலக மேதைகள்
12.நனிசிறந்த நல்லோர்கள்.
வல்ல ரஹ்மான் இந்த உத்தமர்களின் வரலாறுகள் மூலம் பயன் பெற அருள் புரிவானாக!
link : http://www.facebook.com/TamilMumeen
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment